புண்ணியம் கோடி வரும்
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கை கூடும்
ஏற்றத் துணை நன்னிடவே
வாழ்வில் வள ரொளியாம்
கப்பல்
ஸ்ரீசெல்வ விநாயகனை
நாளெல்லாம் வணங்கிடுவோம் நன்று
உலகின்
முதல் மொழியாம் தமிழும், சைவமும் தழைக்க, தங்களின் வாழ்வினையே அர்ப்பணித்த சமயச்
சீலர்கள அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணிய
பூமி இது.
நால்வர் எனப் போற்றப்பெற்ற இச்சமயச்
சான்றோர்களின் வருகையாலும், பாடல்களாலும், சிறப்பு பெற்று, உயரிய இடத்திற்கு
உயர்ந்து, தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட திருத்தலங்கள்
எண்ணிலடங்காதவையாகும்.
இவர்களைப் போலவே, தங்களின் வாழ்நாளை
எல்லாம், தமிழ்ப் பணிக்காக, சைவ சமயத் திருப்பணிகளுக்காக அர்ப்பணித்துக்
கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுள்
குறிப்பிடத்தக்க ஒருவர், நமது சம காலத்தில் வாழ்ந்து, இறைவன் திருவடி நிழலில்
இளைப்பாறிவரும் கப்பல் முருகேசன் செட்யார் அவர்களாவார்.
சிவம் பாடி, சிவம் தேடி
சிவம் நாடி, சிவம் கூடி
வாழ்ந்தவர்களான, கரந்தை
வெங்கடேசன் செட்டியார், காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மூத்த மகனாய் 1931 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் ஐந்தாம் நாள் முருகேசன் செட்டியார் பிறந்தார்.
தஞ்சையில்
தொடக்கக் கல்வியையும், திருச்சியில் உயர் நிலை பள்ளிப் படிப்பையும் பயின்றவர்.
கல்லூரியில் கால் பதிக்காத போதும், ஆங்கிலப் புலமை கைவரப் பெற்றவர். கடின
உழைப்பாளி.
கப்பலிலே பணியில் சேர்ந்தார். கடல் போல்
செல்வம் சேர்த்தார். இதனால் முருகேசன் என்னும் இவரது இயற்பெயரோடு, கப்பலும் சேர,
கப்பல் முருகேசன் செட்டியார் ஆனார்.
தன்பெண்டு தன்பிள்ளை
சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுன் டென்போன்
சின்னதொரு கடுகுபோல்
உள்ளங் கொண்டோன்
தெருவோர்க்கும் பயனற்ற
சிறிய வீணன்
என்று பாடுவான் பாரதிதாசன்.
இப்பூமியில் மனிதராய் பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், சம்பாதித்தோம் என,
தனக்காகவும், தனது குடுப்பத்திற்காகவும் மட்டுமே வாழ்ந்து, வரலாற்றின் பக்கங்களில்
இருந்து, கரைந்து காணாமல் போவதை கப்பல் முருகேசன் செட்டியார் இழிவென்றே எண்ணினார்.
தேடிச் சோறுநிதந்
தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள்
பேசி – மனம்
வாடித் துன்பமிக
வுழன்று - பிறர்
வாடப் பல
செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ
மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்
பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்
போலே - நான்
வீழ்வே னென்று
நினைத் தாயோ?
என்ற பாரதியாரின் பாடல்
வரிகளுக்கு ஏற்ப, வீறு கொண்டு எழுந்து, தனது செல்வத்தை சமயப் பணிகளுக்காக வாரி
இறைத்தார். இவரது குணமோ எளிமையை நாடியது. மனமோ ஆன்மீகத்தைத் தேடியது.
இறைவன்
உறையும் திருக்கோயில்களிலும், வணிகம் செய்யும் நிறுவனங்களிலும், நேர்மையும்,
ஒழுக்கமும், நாணயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டடும் இவரது கொள்கையாகும்.
மனம்,
வாக்கு, காயம் இவற்றில் தூய்மையினைக் கடைப் பிடித்தலும், கோயில் சொத்துக்களை
கோயில்களுக்காகவே பாதுகாத்தலும், கோயிலுக்காகவே செலவிடுவதுமே, இறைவனுக்குச்
செய்யும் உண்மையானத் தொண்டு என்பதை உணர்ந்து, அதன் வழி வாழ்ந்து காட்டிய மாமனிதர்
இவர்.
திருப்பழனம்
ஸ்ரீ அங்காளம்மன் கோயில், தஞ்சாவூர், கரந்தை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர்
ஆலயம், திருவையாறு அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் சுவாமி திருக் கோயில்,
தஞ்சாவூர் சுங்கம் தவிர்த்தான் திடல் கிராமத்தின், ஸ்ரீ லட்சமி நரசிம்ம பெருமாள்
கோயில் என எண்ணற்ற கோயில்களின் திருப்பணிகளுக்காகத் தன் செல்வத்தை ஈந்து, இறைத்
தொண்டே என் தொண்டு என தொண்டாற்றியவர்.
திருவையாற்றின் வடக்கே, கொள்ளிடக் கரையில்
வீற்றிருக்கும், விளாங்குடி அய்யனாரே இவரது குல தெய்வமாகும். அய்யனாருக்கு
அழகிய மண்டபம் எழுப்பித் திருப்பணியும் செய்தார்.
கோயில் திருப்பணி எங்கு நடைபெற்றாலும், தனது
செல்வத்தை வாரி வழங்கி, தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட, கப்பல் முருகேசன்
செட்டியார், தான் இருக்கும் கரந்தையிலேயே, புதிதாய் ஓர் விநாயகர் ஆலயத்தை எழுப்பி 19.8.1985 இல் குடமுழுக்குப் பெருவிழா
செய்தார்.
கப்பல் முருகேசன் செட்டியார் அவர்களால்
கட்டப்பெற்றக் காரணத்தால், கரந்தைப் பகுதி மக்களால் இவ்விநாயகர், கப்பல் ஸ்ரீ செல்வ
விநாயகர் என்றே போற்றப் பெற்றார், பூஜிக்கப் பெற்றார். நாளடைவில் இப்பெயரே
நிலைத்தது.
தனது
வாழ்வை ஆன்மீனத்திற்காக அர்ப்பணித்த கப்பல் முருகேசன் செட்டியார் அவர்கள், தனது 76
ஆம் அகவையில், தான் நாளும் வணங்கிய, இறைவனின் இணையடி நிழலில் இரண்டறக் கலந்தார்.
கப்பல்
முருகேசன் செட்டியார் அவர்கள் காட்டிய ஆன்மீக வழியில், தொடர்ந்து பயணிக்கும் அவரது
குடும்பத்தினரின் அயரா முயற்சியின் விளைவாக, கப்பல் செல்வ விநாயகர் ஆலயமானது,
முழுவதும் கருங்கற்கள புதிய ஆலயமாக வடிவமைக்கப்பட்டது,
இராசராச
சோழன் சிவபெருமானுக்கு எடுப்பித்த கற்றளி போல், கரந்தையில், கப்பல் செல்வ
விநாயகரின் கற்றளி கம்பீரமாய் காட்சி தருகின்றது.
கணபதி தேவா
கஜமுக
நாதா
கப்பல்
ஸ்ரீ செல்வ விநாயக நாதா
நஞ்சைக் கொஞ்சித்
தவழும்
நன்னிலமைத் திகழ்வோனே
நெஞ்சை அள்ளிச்
செல்லும்
ஐங்கரனே பெருமானே
என பக்தர்கள் போற்றி வணங்க,
எழில்மிகு கப்பல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா குடமுழுக்குப் பெருவிழா, 2010 ஆம்
ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாள் சிறப்புடன் நடைபெற்றது.
கப்பல் ஸ்ரீ செல்வ விநாயகர்
கப்பல் செல்வ விநாயகர் ஆலய
கும்பாபிஷேகப் பத்திரிக்கை
கப்பல் செல்வ விநாயகர் திருக்கோவிலின் எழில்மிகு தோற்றம்
கும்பாபிஷேகம் நடந்த அன்று இரவு வீரமணி கண்ணன் மற்றும் குழுவினர்
அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது,
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படக்காட்சிகள்
அன்று இரவு நடைபெற்ற வீரமணி கண்ணன் இசைக்கச்சேரியின்
போது வெளியிடப்பட்ட கப்பல் ஸ்ரீ செல்வ விநாயகர் புகழ் பாடும் காக்க காக்க
என்ற இசை குருந்தகடு வெளியிடப்பட்டது,
மறுநாள் 28.08.2010 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில்
கானாமிருதவாணி கலைமாமணி டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன்
அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படக்காட்சிகள்
27.08.2010 வெள்ளி அன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது
பட்டினத்தார் போலே
கப்பலிலே பணியாற்றி
கப்பல் செட்டியாரெனக் கனிவுடன் பிறர்போற்ற
கப்பல் செட்டியாரெனக் கனிவுடன் பிறர்போற்ற
ஒப்பிலா வித்தகராய் செல்வ விநாயகரின்
செங்கமலப் பாதம்
இணைந்தாய் போற்றிபோற்றி
கப்பல் விநாயகரை வணங்குவோம் . கப்பல்
செட்டியாரைப் போற்றுவோம்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி!